பேண்ட் சர்ட்டுடன் வீடுகளில் திருடிவிட்டு சிவனடியார் வேடத்தில் சுற்றிய கொள்ளையன் கைது: 15க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை; 65 சவரன் நகைகள் பறிமுதல்

பெரம்பூர்: கொளத்தூர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி விட்டு, போலீசில் சிக்காமல் இருக்க சிவனடியார் வேடத்தில் சுற்றி வந்த பிரபல கொள்ளையன் சிக்கினார். அவரிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. கொளத்தூர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட ராஜமங்கலம், கொளத்தூர்,  பெரவள்ளூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பூட்டியிருக்கும் வீடுகளை இரவு நேரத்தில் நோட்டம் பார்த்து பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. பல இடங்களில் திருடிய நபர் ஒரே நபர் என்பதும் அவரை பிடிக்க எந்தவிதமான தடயங்களும் கிடைக்காததால் போலீசார் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இதையடுத்து, இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்ய   கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் உத்தரவின்பேரில் கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் பெரவள்ளூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் சம்பவம் நடந்த இடங்களில் பதிவான சந்தேக தொலைபேசி எண்கள் மூலம் புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் பழைய திருடன் ஒருவனின் கைரேகை ஒத்துப்போனது.

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளியான திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் பகுதியை சேர்ந்த துப்பாக்கி சேகர் (எ) சேகர் (47) ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வில்லிவாக்கம் பகுதியிலிருந்து ரயில் மூலம் சிவனடியார் போன்று வேடமிட்டு ஒருவர் காசிக்கு செல்ல இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துப்பாக்கி சேகர் (எ) சேகரை வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகில் வைத்து கொளத்தூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் ராஜமங்கலம், கொளத்தூர், பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15 இடங்களில் சம்பந்தப்பட்ட சுமார் 65 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், பிடிபட்ட நபர் திருடும்போது பேண்ட் சட்டை அணிந்து கொண்டு வந்து திருடுவதும், அதன் பின்பு சிவனடியார் வேடம் போட்டு திருப்பதிக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சேகர் மீது ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* புட்லூரில் மனைவி... திருப்பதியில் ஆசை நாயகி...

கைது செய்யப்பட்ட சேகருக்கு புட்லூரில் ஒரு குடும்பம் உள்ளது. திருப்பதியில் ஆசை நாயகி என இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருட செல்லும் இடங்களில் தான் மாட்டிக் கொள்ளாதவாறு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளார். போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின் 3 வருடம் கழித்து சிக்கி உள்ளார். இவர், 15க்கும் மேற்பட்ட வீடுகளில் கிட்டத்தட்ட 100 சவரனுக்கும் மேல் திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், 65 சவரன் வரை மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. பல வீடுகளில் இவ்வளவு நகை திருடு போனது என புகார் கொடுத்துள்ளனர். ஆனால், கைவரிசை காட்டிய சேகர் அந்த வீட்டில் அவ்வளவு இல்லை. இவ்வளவுதான் இருந்தது என கூறி வருகிறார். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு நகை திருடு போனது என்பதில் தொடர்ந்து குழப்பம் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: