கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்!: நியாயமான விசாரணை நடைபெற மாணவியின் செல்போனை ஒப்படையுங்கள்.. பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணை குழுவின் அறிக்கையை அவ்வப்போது பெற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கையை, மூடி முத்திரையிட்ட உரையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக தற்போது வரை பெற்றோர்கள் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவித்தார். உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போன் கடந்த 26ம் தேதி கூட பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். அச்சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, தொழில்நுட்பம் வளம் உள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்று இல்லை எனவும், அதை ஒப்படைப்பதற்கு விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினால் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பது மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் என்றும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என்பதால் நியாயமான விசாரணை நடைபெற மாணவி செல்போனை ஒப்படைக்கும்படி பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த செல்போனை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: