வெள்ளப்பெருக்கு தணிந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: வெள்ளப்பெருக்கு தணிந்ததால் குற்றால அருவிகளில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பலத்த மழை பெய்து வந்த போதிலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய மழை இல்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் தூறலோடு நின்று விடுகிறது. மழை பெய்த அடுத்த நாட்கள் வெயில் அடிப்பதால் மழை பெய்த சுவடுகளே இல்லாமல் போய் விடுகிறது. குற்றாலம் மற்றும் தென்காசியில் நேற்று வெயில் இல்லாமல் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் அறவே மழை இல்லை.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் விழுந்தது. பழைய குற்றாலத்தில் படிக்கட்டுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியிலும் 5 பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. இதையடுத்து நேற்று மதியம் முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: