தெலங்கானாவில் படிபூஜையில் பங்கேற்று திரும்பியபோது டிராக்டர் மீது லாரி மோதி 5 ஐயப்ப பக்தர்கள் பலி

* 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

* ராங் ரூட்டில் வந்ததால் விபத்து

திருமலை :  தெலங்கானாவில் ஐயப்பசுவாமி படி பூஜையில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ராங்ரூட்டில் டிராக்டர் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் முனகல அருகே உள்ள சாகர் கால்வாயின் இடது கரையில் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஐயப்பசுவாமிக்கு மகாபடி பூஜை நடந்தது. இந்த பூஜையில் அப்பகுதி பக்தர்கள் மற்றும் முனகல கிராமம் உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து பங்கேற்றனர்.

இரவு 10 மணியளவில் படி பூஜை முடிந்து முனகல கிராமத்தை சேர்ந்த 38 பக்தர்கள், தாங்கள் வந்த டிராக்டர் டிரெய்லரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். விஜயவாடா- ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள தங்கள் கிராமத்திற்கு டிரைவர் ராங் ரூட்டில் டிராக்டரை ஓட்டிச்சென்றார்.அப்போது ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற லாரி டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டர் சேதமாகி ஐயப்ப பக்தர்களான உதய்லோகேஷ், கோட்டய்யா மற்றும் பெண் பக்தர்களான தண்ணீரூ பிரமிளா, கந்துஜோதி, சிந்தகயலா பிரமிளா ஆகியோர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட பொதுமக்கள் அங்கு வந்து படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு கொடாடா மருத்துவமனைக்கு தங்களது வாகனங்களில் அழைத்து சென்று அனுமதித்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள பக்தர்கள், கம்மம் மற்றும் சூர்யாபேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 முனகல கிராமத்திற்கு சாலையில் 1 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றி வருவதற்கு பதிலாக ராங் ரூட்டில் 200 மீட்டர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார், பொதுமக்கள் தெரிவித்தனர். லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: