கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி நிச்சயம் சோற்றுக்கே வழியில்லாதவர் அமெரிக்காவில் விஞ்ஞானி: பழங்குடியினத்தை சேர்ந்தவர் சாதனை

மும்பை: சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன் கஷ்டப்பட்டு படித்து அமெரிக்காவில் இன்று விஞ்ஞானியாக இருக்கிறார். இந்த மாணவனின் பெயர் ஹலாமி (44). கட்சிரோலி மாவட்டம், குர்கேடா தாலுகாவில் உள்ள சிர்சாடி கிராமத்தை சேர்ந்தவர். பழங்குடியினத்தவர்கள் வாழும் இந்த கிராமம் மிகவும் பின்தங்கியது. ஹலாமி இப்போது அமெரிக்காவில் உள்ள பிரபல மருந்து நிறுவனத்தில் மரபணு மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தனது சிறு வயதில் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியதாவது:

சிறுவயதில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். எங்களுக்கு சிறிய வயல் உள்ளது. அதில் கிடைக்கும் வருமானம் போதாது. பெற்றோர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினர். நாங்கள் அரிசி மாவில் கஞ்சி காய்ச்சி ஒரு வேளையாவது வயிற்றை நிரப்ப முயற்சிப்போம். மழைக்காலத்தில் வேலையே கிடைக்காது. அப்போது அதிகம் சிரமப்பட்டோம். மஹுவா பூக்களை சமைத்து சாப்பிடுவோம். அதை சாப்பிடுவது கஷ்டம். சேமிப்பதும் கஷ்டம். 400 அல்லது 500 குடும்பங்கள் வாழும் அந்த கிராமத்தை சேர்ந்த 90 சதவீத மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள். 7ம் வகுப்பு வரை படித்த அப்பாவுக்கு 100 கிமீ தொலைவில் உள்ள பள்ளியில் சமையல்காரர் வேலை கிடைத்தது.

1 முதல் 4ம் வகுப்பு வரை காசன்சூரில் உள்ள ஆசிரம பள்ளியில் படித்தேன். ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்று டவட்மாலில் உள்ள அரசு வித்தியாநிகேதம் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். நான் கட்சிரோலி கல்லூரியில் பிஎஸ்சி, நாக்பூரில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் எம்எஸ்சி. முடித்தேன். 2003ம் ஆண்டு நாக்பூர் எல்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றினேன். பின்னர், மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனாலும், மேல் படிப்பு படிக்க விரும்பி அமெரிக்கன் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பிஎச்டி படித்தேன். இவ்வாறு ஹலாமி கூறினார். இவர் தந்தை இப்போது இறந்து விட்டார். ஊரில் ஒரு வீடு கட்டியுள்ளார். தாயாரும் சகோதரர்களும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள்.

Related Stories: