தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை; கொடைக்கானலில் மண்சரிவு மரங்கள், மின்கம்பம் சாய்ந்தன: நீர்நிலைகள் நிரம்பியதால் வெள்ள எச்சரிச்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள், மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. நாயுடுபுரம் பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்சாரத்துறையினர் மின்கம்பத்தினை சீர் செய்து மின் இணைப்பு வழங்கினர்.

காற்றுடன் மழை பெய்வதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்படுவதாக மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர். நேற்று அதிகாலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை, நண்பகல் முதல் மீண்டும் கொட்டித் தீர்த்தது. இதன்படி 4 மணி நேரத்திற்கும் அதிகமாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தலங்களை காண முடியாமலும் தவித்தனர். மேலும், அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

வத்தலகுண்டு பிரதான சாலையில் சீனிவாசபுரம், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளின் அருகே சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினரும், நகராட்சி பணியாளர்களும் மண் சரிவுகளை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தற்காலிகமாக அகற்றினர். இதே போல கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் பிரதான சாலையில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் இந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து சீரானது.

Related Stories: