கோடப்பமந்து கால்வாய், சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி:  ஊட்டியில் உள்ள கோடப்பமந்து கால்வாய் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி நகரின் மத்திய பகுதியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் சேரிங்கிராஸ், மெயின் பஜார், மத்திய பஸ் நிலையம் வழியாக ஊட்டி ஏரியை சென்றடைகிறது. கால்வாயின் இரு புறங்களிலும் பொதுமக்கள் மற்றும் வணி நிறுவனங்கள் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதால் தேக்கமடைந்து அடைப்பு ஏற்படுகிறது. நீரில் அடித்து வரப்படும் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் ரயில்வே மேம்பாலம் அடியில் அல்லது சுத்திகரிப்பு நிலையம் பகுதியில் தேங்கிவிடுகிறது.

இதனால், சாதாரண மழை பெய்தால் கூட கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படகு இல்லம் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீர் சாலையில் தேங்கி நின்றுவிடும், இதனால், இவ்வழித்தடத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது ஊட்டியில் கொட்டி வரும் நிலையில், இந்த கால்வாயில் எந்நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் கோடப்பமந்து கால்வாய் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த தண்ணீர் படகு இல்லம் சாலையில் வராமல் தடுக்க மணல் மூட்டைகளை வைக்க நகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: