தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10ம் தேதி முதல் தமிழகமெங்கும் 36 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும், கனமழை வருகிற 16ம் தேதி வரை நீடிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்களது அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பால், குடிநீர் மற்றும் உணவு பொருட்கள், அத்தியாவசிய, அவசர உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிவந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடைய பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: