மாதவரத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற 18 தெருக்களில் தரை தொட்டிகள்: மோட்டார் மூலம் ரெட்டேரிக்கு செல்கிறது

சென்னை: சென்னையில் முழுவதும் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் குறுகிய காலத்துக்குள் மிக வேகமாக நடத்தப்பட்டதால் தற்போது பெய்து வரும் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னையில் சில இடங்கள் மிக தாழ்வாக இருப்பதால் அங்கு மழைநீர் கால்வாய் அமைத்தாலும் அங்கிருந்து தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.  குறிப்பாக, மாதவரம் மண்டலம், வார்டு 30க்கு உட்பட்ட கணபதி சிவா நகரில் 200 அடி சாலை மற்றும் ஜிஎன்டி நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 18 தெருக்கள் மிகவும் தாழ்வான பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் இருந்து இயற்கையாக மழை நீர் வெளியேற வழி இல்லை.

ஆனாலும் இந்த பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் இந்த 18 தெருக்களிலும் 50,000 லிட்டர் கொள்ளளவு உள்ள தரை தொட்டி அமைக்கப்பட்டு, அதில் தேங்கும் மழைநீரை உயர் குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள ரெட்டை ஏரியில் வெளியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.  அதன்படி, இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இந்த தெருக்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 35, 30, 25 மற்றும் 20 குதிரை திறன் கொண்ட நான்கு மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு இங்கிருந்து 30 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தரை தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் ரெட்டேரிக்கு மழைநீர் கொண்டு செல்லப்படுகிறது.

Related Stories: