இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.14 கோடி கஞ்சா, பீடி இலை பறிமுதல்-4 பேர் கைது

ராமேஸ்வரம் : இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.14 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் பீடி இலைகளை, அந்நாட்டு கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடல் எல்லையில் நெடுந்தீவிற்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் அந்நாட்டு கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 படகுகளை வழிமறித்து சோதனை நடத்தினர்.

இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 பெரிய பார்சல்களில் இருந்த 459 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.13.70 கோடியாகும். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 படகுகளையும் பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இலங்கை மண்டைதீவை சேர்ந்த 2 பேரை கைது செய்து நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் இலங்கை வடக்கு கடற்படையை சேர்ந்த கடற்படையினர், இலங்கை நீர்கொழும்பு கடல்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவா கடற்கரை பகுதியில் நிறுத்தியிருந்த 2 லாரிகளை சோதனையிட்டனர். இதில் லாரியில் 2,448 கிலோ பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இலைகள் இருந்துள்ளது. இதன் மதிப்பு இலங்கையில் ரூ.24.50 லட்சம். இதனை கைப்பற்றிய கடற்படையினர் 2 லாரிகள் மற்றும் ஒரு படகை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக லாரியில் இருந்த இருவரை கைது செய்த கடற்படையினர், இலங்கை கட்டுநாயக்கா சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசம் ஒப்படைத்துள்ளனர்.இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 5.479 டன் அளவிலான கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.164 கோடி என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: