நெல்லையில் 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கருமாரி திருக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நெல்லை: ரூ. 4.03 கோடி மதிப்பீட்டில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் அம்மன் மேற்கு பிரகார மண்டபம் கரு உருமாறி தீர்த்த குளம் அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு சீரமைத்தல் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை முழு சுதந்திரத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் ஒரு  பகுதியாக திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் அமைந்திருக்கின்ற அம்மன் திருக்கோயில் மண்டபம் பழுதுபார்த்தல், கருஉறுமாறி திருக்குளத்தை சீர்படுத்தும் பணிகள், அம்மன் திருக்கோயில் மேற்கூரையில் மழை நீர் ஒழுகுவதை சரிசெய்து, தட்டோடு பதிக்கின்ற பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 4 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை டிவிஎஸ் நிறுவனத்தின் குடும்பத்தார் உபயதாரராக செய்து தருகின்றனர். சுமார் 4 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இப்பணிகள் முதல்வர் உத்தரவிற்கிணங்க கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கு முழுவதுமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம். ஓராண்டு காலத்திற்குள் இந்த பணிகளை நிறைவு செய்து தருவதாக உறுதியளித்துள்ள டிவிஎஸ் குடும்பத்தாருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதை கடமையாக கருதுகிறோம்.

இந்த இனிய நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு சேர்த்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் வகாப், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் ஆகியோருக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், டிவிஎஸ் குடும்பத்தைச் சார்ந்த முன்னாள் டிஜிபி சேகர் அவர்களுக்கும் துறையின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இந்த திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுடைய காலணிகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பதற்கான அறையினை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருந்தார்.

ரூபாய் 62 லட்சம் செலவில் காலணிகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையை அமைத்து தந்திட கட்டுமான விழா தொடக்கப் பணியை அவரும் பங்கேற்கின்ற ஒரு நிகழ்ச்சியாக விரைவில் அமைத்து தருவோம் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர் வைத்திருக்கிற கோரிக்கைகளான  நெல்லையப்பர் கோவிலில் இருக்கின்ற திருத்தேருக்கு கண்ணாடி மாளிகை அமைப்பதற்கு உண்டான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்தப் பணிகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படுவதோடு, கங்கைகொண்டான்புரம், ராஜவல்லிபுரம் ஆகிய திருக்கோயில்களுக்கு திருத்தேர் அமைத்த தர வேண்டுமென வைத்த கோரிக்கை முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று, அனுமதியை பெற்று, அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் நிச்சயம் அறிவிப்பையும் வெளியிடுவோம்.

அதோடு மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் சுமார் 20 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தோம். அதில் 9 திருக்கோயில்கள் இது வரையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 2022 - 2023 ஆம் ஆண்டிற்கு சுமார் 32 கோடி ரூபாய் செலவில்30 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் அறிவித்திருந்தோம். அதில் 3 திருக்கோவில்களுக்கு 5 மாத கால இடைவெளியிலேயே திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு குடமுழுக்கு முடிந்திருக்கிறது. மீதமிருக்கின்ற 27 திருக்கோயில்கள், கடந்த ஆண்டில் மீதமிருக்கின்ற 11 திருக்கோயில்கள் ஆக மொத்தம் 38 திருக்கோயில்களுக்கும் அடுத்த ஆண்டு நிறைவிற்குள் முழுவதுமாக திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும். மிகப் பழமையான பிரம்மதேசம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலுக்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை தொடங்கி இருக்கின்றோம்.

அத்திருகோயிலின் திருத்தேரை சுமார் 34 லட்சம் ரூபாய் செலவில் உபயதாரர் நிதியோடு செய்வதற்கு ஆணையினை வழங்கி இருக்கின்றோம். இன்னார், இனியவர் என்று பார்க்காமல் கோரிக்கைகள் எங்கிருந்து வரப்பெற்றாலும் இந்து சமய அறநிலைத்துறை பொறுத்த அளவில் அந்த கோரிக்கைகளை பக்தர்களின் நலன்களை கருத்திற்கொண்டு நிறைவேற்றப்பட வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். அந்த வகையில் எங்களிடம் வைக்கப்படுகின்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக, இறையன்பர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையிலான அரசாக இந்த அரசு திகழும்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எம். அப்துல் வகாப், திரு. நயினார் நாகேந்திரன்,  திரு. ரூபி மனோகரன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஆவுடையப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் திரு. பி.எம்.சரவணன், திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் திருமதி கவிதா பிரியதர்சினி, உதவி ஆணையர் திருமதி எஸ். கவிதா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: