தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு

துரைப்பாக்கம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசியதாவது: மனவலிமை மற்றும் ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாம் 40, 50 வயது அடையும் போதுதான் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். இந்த காலகட்டத்தில் நாம் அனைவருக்கும் ஒரு முக்கியமான இடற்பாடு என்றால் அது சமூக வலைதளம் தான், அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை கழிக்கின்றனர். இணையதளம் மாணவர்களுக்கு படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தினால் அது சிறந்ததாக இருக்கும், மாணவர்கள் வளர்ச்சிகளுக்கு இணையதளங்கள் உறுதியாக இருக்கும். ஆனால், அதிலேயே அதிக நேரத்தை கழித்தால் அவருடைய வாழ்வில் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும், மாணவர்களுக்கு நல்ல நண்பர்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். அது தீய நண்பர்களாக இருந்தால் மிகப்பெரிய இடையூறாக இருக்கும்,  தினந்தோறும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக சரகத்தில் போதைபொருள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் கைது செய்து வருகிறோம், போதைபொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது எங்களது லட்சியம் அவ்வாறு இருந்தால் மகிழ்ச்சி. எப்பொழுது, அனைத்து காவலர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றால், என்றைக்கு போதைப்பொருள் விற்றவர், வாங்கியவர் என ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் இருக்கிறதோ அன்று தான் காவல்துறையினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள், போதைப்பொருள் அற்ற தமிழகத்தை உருவாக்குவதே அனைவரின் லட்சியமாகும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் காமினி, துணை ஆணையர்கள் மூர்த்தி, ஜோஸ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: