பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி கிராம பல்கலை வருகை: இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 36வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களும், 50க்கும் மேற்பட்ட முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பட்டங்களும் வழங்கப்படுகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகிக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். பிரதமர் பங்கேற்க உள்ளதையொட்டி தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர் குழுக்கள், பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு மோப்ப நாய் குழுக்கள், 20க்கும் மேற்பட்ட நுண்ணறிவு போலீசார் குழுக்கள் என 300க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு போலீசார், பல்கலைக்கழக வளாகப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மத்திய பாதுகாப்பு போலீசாரும் பல்கலைக்கழக வளாகப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்த பிரதமர் வரும் ெஹலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேட், விவிஐபிக்கள் வரும் பாதுகாப்பு கான்வாய்,  விழா நடைபெறும் பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கு, ஓய்வு அறைகள், பார்வையாளர் அரங்குகளை அவர் ஆய்வு செய்தார்.

Related Stories: