சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார்: கட்சி நிலவரம் குறித்து பேச எடப்பாடி, ஓ.பி.எஸ். சந்திக்க திட்டம்?

சென்னை: தனி விமானம் மூலம் இன்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். நாளை காலை சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்னை வரும்போது அவர்களை அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி சென்னை வந்தபோதும், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் டெல்லிக்கு சென்றபோதும் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருவதால், அதற்கு தீர்வு காண, அமித்ஷா இன்று சென்னை வரும்போது அவரை சந்திக்க எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி பாஜ தலைமையோ, ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புகிறது. அதாவது எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் பாஜ - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், பாஜ வெற்றிபெற முடியும் என்று எதிர்பார்க்கிறது. இதற்கு, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று இரவு சென்னை வரும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர். இருவரையும் அமித்ஷா சந்திப்பாரா என்பது இன்று இரவுதான் தெரியவரும். அப்படியே சந்தித்தாலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இணைய வேண்டும் என்ற கருத்தையே அமித்ஷா வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், பாஜ கூட்டணி கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித்ஷா பலமுறை முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வருகிறார். இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா, தமிழ்நாட்டிலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட மீண்டும் முயற்சி செய்வார் என்றே தமிழக பாஜ தலைவர்கள் கூறுகிறார்கள். அதற்காகவே நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே இன்று இரவு சென்னை வருவதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அமித்ஷாவே அழைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக கட்சியில் மட்டுமல்ல, பாஜ கட்சியினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, ‘இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச வாய்ப்புள்ளது. அதேநேரம், இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றை தலைமை தான் ஒரே முடிவு, அது எடப்பாடி பழனிசாமி தான் என்ற கருத்தே வலியுறுத்தப்படும். அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார்’ என்றனர்.சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அமித்ஷா, நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை மதியம் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Related Stories: