மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பனகல் பூங்கா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்: 12ம் தேதி முதல் ஒரு வாரம் அமல்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பனகல் பூங்கா பகுதிகளில் வரும் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ  ரயில்  பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள  உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, பனகல் பூங்கா மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு  சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச்  செய்ய  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையிலிருந்து மாற்றப்பட்டு  பனகல் பூங்காவிலிருந்து ம.பொ.சி. சாலைக்கு செல்லலாம்,  தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து  பனகல் பூங்காவிற்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கட் நாராயணா சாலை வழியாக  உஸ்மான் சாலை (பனகல் பார்க்) அடையலாம். உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீஸ் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள்  தியாகராய சாலை மற்றும் தணிகாசலம்  சாலை வழியாக திருப்பிவிடப்படும். பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பேரந்துகள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு, சிவஞானம் சாலை, தியாகராய சாலை வழியாக திருப்பி விடப்படும்.

வெங்கடநாராயணா சாலை - நந்தனம்  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பர்கிட் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் வெங்கட் நாராயணா சாலை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணா சாலையை அடையலாம். தி.நகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக  அண்ணா சாலைக்கு வெங்கட் நாராயணா சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்புச் சாலை வந்து  அண்ணா சாலையை அடையலாம். நந்தனம் சந்திப்பிலிருந்து வெங்கட் நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள்  பனகல் பூங்கா வரை வழக்கம்போல் செல்லலாம். இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: