புனித் ராஜ்குமாரின் பட டிக்கெட் விலை பாதியாக குறைப்பு

பெங்களூர்: மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் வெளியாகியுள்ளது. இதன் தியேட்டர் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக நடித்து வந்த ஜேம்ஸ், கந்ததாகுடி படங்கள் ஷூட்டிங்கை முடித்திருந்தார். ஜேம்ஸ் படம் சில மாதங்களுக்கு முன் ரிலீசானது. இந்நிலையில் கந்ததாகுடி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தை புனித்தின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் தயாரித்துள்ளார். அமோக வர்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் கர்நாடக மாநில காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் இது.

இந்த படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த படத்தின் கருத்துக்காக கர்நாடக மாநிலத்தில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கர்நாடக தியேட்டர்களில் இந்த படத்தின் டிக்கெட் விலையை இந்த வாரம் மட்டும் 50 சதவீதம் குறைக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்களில் ரூ.56க்கும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.112க்கும் டிக்கெட்கள் கிடைக்கும். இது பற்றி அஸ்வின் புனித்ராஜ்குமார் கூறும்போது, ‘இந்த படத்தை குழந்தைகளும் பெரியவர்களும் அதிகம் பார்க்க வேண்டும் என புனித் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றவே இந்த படத்தின் டிக்கெட் விலையை பாதியாக குறைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: