கல்லூரி மாணவர் கொலை தமிழகத்திற்கு வழக்கை மாற்ற கேரளா ஆலோசனை: கைதான கிரீஷ்மாவை இன்று மீண்டும் குமரி அழைத்து வந்து விசாரணை

நாகர்கோவில்: குமரி  கல்லூரி மாணவர் கொலையில் கைதான அவரது காதலி கிரீஷ்மாவை இன்று குமரி அழைத்து வர  போலீசார் திட்டமிட்டுள்ளனர். குமரி  மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர்  ஷாரோன் கொலையில் கைதான கிரீஷ்மா, அவரது தாய்  சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரிடம்  திருவனந்தபுரம் குற்றப்பிரிவு  போலீசார் விசாரித்து  வருகின்றனர். நேற்று முன்தினம் மூவரையும் ராமவர்மன்சிறையில் உள்ள  வீட்டுக்கு அழைத்து சென்று 9  மணி நேரத்திற்கும் மேல்  விசாரித்தனர். இதில் பல்வேறு பொருள்களை  போலீசார் கைப்பற்றினர்.

நேற்று  கிரீஷ்மாவை போலீசார் விசாரணைக்கு வெளியே எங்கும் அழைத்துச் செல்லவில்லை.  

அவர் ஷாரோன் உள்பட சிலரிடம் வாட்ஸ் அப் காலில் பலமுறை பேசினார். அது அவரது  குரல் தானா என்பதை கண்டறிவதற்காக நேற்று அவருக்கு குரல் பரிசோதனை  நடத்தப்பட்டது.

குமரியில் திற்பரப்பு, பேச்சிப்பாறை போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இருவரும் சென்றதால் கிரிஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே முக்கிய குற்ற சம்பவங்கள்  அனைத்தும் தமிழக எல்லையில் நடந்துள்ளதால் வழக்கை கேரள போலீசார்  விசாரித்தால் சட்டச் சிக்கல் ஏற்படும் என்ற கருத்து எழுந்தது. இதுகுறித்து  கேரள போலீஸ் டிஜிபி அனில்காந்த், கேரள சட்டத்துறை இயக்குநர் ஷாஜியுடன் ஆலோசனை  நடத்தினார்.

 அப்போது, ஷாரோன் கொலை வழக்கில்  முக்கிய சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடந்துள்ளதால்  வழக்கை தமிழ்  நாட்டுக்கு மாற்றுவது தான் நல்லது என்று சட்டத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்  பினராயி விஜயனுடன் டிஜிபி ஆலோசனை நடத்திய பின்னர் தான் இறுதி முடிவு எடுக்கப்படும். சகஜமாக பேசிய கிரீஷ்மா: திருவனந்தபுரம் அருகே வெட்டுகாடு பகுதியில் ஒரு பிரபலமான சர்ச்   உள்ளது. இங்கு  ஷாரோன், கிரீஷ்மா சென்று பிரார்த்தித்துள்ளனர். அங்கு கிரீஷ்மாவை நேற்று முன்தினம் ேபாலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.

இங்கு, ‘தனது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று   ஷாரோன் பிரார்த்தனை செய்திருப்பார் அல்லவா ‘ என்று குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் கேட்டார். ‘இருக்கலாம், ஆனால் அதன்பின்   நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ‘ என்று புன்னகையுடன் கிரீஷ்மா பதிலளித்தார். சுற்றுலாத்தலமான வேளியில் ஒன்றாக சென்ற இடம், சாப்பிட்ட ஓட்டல், போட்டோ எடுத்த இடம்   ஆகியவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் கிரீஷ்மா போலீசாரிடம்   காண்பித்தார்.

*தாய், மாமா சிறையில் அடைப்பு

ஷாரோன்  கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததின் பேரில் கைது செய்யப்பட்ட  கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் 5 நாள் போலீஸ் காவலில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். காவல் விசாரணை  முடிந்ததை தொடர்ந்து இருவரும் நேற்று  நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர்.

Related Stories: