திருவொற்றியூர், ஆர்.கே.நகரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு: கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஆர்.கே.நகரில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கு 2 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒன்றான திருவொற்றியூர் பேசின் சாலை அருகேயுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, ரயில்வே துறை, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகளிடம் இடத்தின் தன்மை, சுற்றுப்புற சூழல் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், கலாநிதி வீராசாமி எம்பி  நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இல்லாத நிலை உள்ளது. அதை பூர்த்தி செய்யும் வகையில் திருவொற்றியூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு இடம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், மாநில அரசிடம் தடையில்லா சான்று மற்றும் தேவையான உதவிகளை பெற்று ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து விரைவில் பள்ளிக்கூடம் அமைய தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம். பள்ளி அமைக்கப்பட்டால் 2500 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: