தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுடன் ரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் சந்திப்பு

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களை இரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விவாதித்தார்கள். இரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை (Rail India Technical and Economics Service Limited)  நிறுவனத்தின்(RITES) உயர் அலுவலர்கள் இன்று (8.11.2022) மாலை 5 மணியளவில், தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் அந்நிறுவனம் திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்தார்கள்.

இரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (Rail India Technical and Economics Service Limited) (RITES) டெல்லியில், தலைமை அலுவலகத்தை கொண்டு இந்தியா முழுவதும், இரயில்வே திட்டங்கள், மேம்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள் போன்ற திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தல்,  திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் விவாதித்து, தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கவும், மேம்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள், சாலைப்பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மற்றும் லைட்ஹவுஸ் முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் முறையாக விண்ணப்பித்து பங்குபெறும்படி அறிவுறுத்தினார்கள். இந்த விவாத்தில், திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, திரு.ராகுல் மித்தல், IRSE., (ரயில்வே) தலைவர், நிர்வாக இயக்குனர், இரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் டெல்லி, திரு.ரணதீர்ரெட்டி, IRSE., குழு பொது மேலாளர், தெற்கு மண்டல அலுவலகம், இரயில் இண்டியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம், பெங்களூர், திரு.கோபால், பொது மேலாளர், ஆய்வு, சென்னை, திரு.சுதீப், இணை பொது மேலாளர், சிவில், பெங்களூர், திரு.டி.எம்.ராஜ் துணை பொது மேலாளர், சிவில், சென்னை ஆகியோர் பங்கு பெற்றனர்.

Related Stories: