மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து தொழிலாளி இறந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து தொழிலாளி இறந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, மதுரை கூடல்புதூர், அஞ்சல் நகரில் நடந்து வரும் பாதாளசாக்கடை பணியில், ஈரோடு மாவட்டம், குப்பந்தபாளையம் அருகே கரட்டூரை சேர்ந்த சக்திவேல்(35), 14 அடி ஆழ பாதாள சாக்கடை பள்ளத்தில் இறங்கி நேற்று பகலில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது குடிநீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல்  சரிந்து விழுந்தது. இதனால் சக்திவேல் மூழ்கத்தொடங்கினார். அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால், மண்ணில் புதைந்தவரை மீட்க முடியவில்லை.  தகவலறிந்து தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் 16 பேர், சுமார் 4 மணி நேரம் போராடி சக்திவேலை பிணமாக மீட்டனர்.

இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவன மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மேற்பார்வையாளர் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: