பாலியல் குற்றச்சாட்டில் கைதான குணதிலகாவுக்கு ஜாமீன் மறுப்பு: சஸ்பெண்ட் செய்தது இலங்கை வாரியம்

சிட்னி: பாலியல் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ள  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸி. நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலக கோப்பை டி20 தொடருக்கான  இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த குணதிலகா (31), நமீபியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்துக்கு பிறகு காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனாலும், நாடு திரும்பாமல் அணியினருடனேயே தங்கியிருந்தார்.

அரையிறுதிக்கு தகுதி பெறாத இலங்கை அணியினர்  நேற்று முன்தினம் நாடு திரும்பினர். அவர்களுடன் புறப்பட இருந்த குணதிலகாவை  திடீரென ஆஸி.  போலீசார் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்தனர். இந்நிலையில்,  நேற்று கை விலங்குடன்  குணதிலக  காணொளி  காட்சி மூலம் நீதிபதி முன்னிலையில் நேர் நிறுத்தப்பட்டார். அப்போது குணதிலகா தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. போலீசார் மேற்கொண்டு விசாரிக்க உள்ளதால் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிறயைில் அடைத்தனர். இடை நீக்கம்: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குணதிலகாவை,  எல்லா வகையான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக சஸ்பெண்ட் செய்வதாக  இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் ஷம்மி சில்வா, ‘வழக்கை எதிர்கொள்வதற்கான சட்ட உதவிகள் குணதிலகாவுக்கு வழங்கப்படும். இதில் அவருக்கு உதவியாக இருப்போம். வேறு எதையும் சொல்வதற்கு இல்லை. குற்றம் செய்தது உறுதியானால் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

குணதிலகா மீது குற்றம் சாட்டியுள்ள இளம்பெண் அவருக்கு  டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி உள்ளார். சம்பவம் நடந்தபோது இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் இருந்ததுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: