புதுடெல்லி: பந்தை பவுண்டரியும் சிக்சருமாக மைதானத்தின் அத்தனை திசையிலும் பறக்கவிடக் கூடியவர் என்பதை குறிக்கும் வகையில், தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸை ரசிகர்கள் ‘மிஸ்டர் 360’ என்று கொண்டாடி வந்தனர். தற்போது, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ‘ஸ்கை’ என செல்லமாக அழைக்கப்படும் சூரியகுமார் யாதவும் அதே போன்ற அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் புதிய ‘மிஸ்டர் 360’ இவர் தான் என கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் கொண்டாடத் தொடங்கி உள்ளனர். ‘இந்த ஒப்பீடு தேவையற்றது. உலகில் ஒரே ஒரு ‘மிஸ்டர் 360’ தான். நான் அவரைப் போல விளையாட முயற்சிக்கிறேன்... அவ்வளவு தான்’ என்று சூரியகுமார் தன்னடக்கத்துடன் தெரிவித்தார். ஆனாலும், நடப்பு உலக கோப்பை டி20ல் அவரது அதிரடி ஆட்டம் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுதலை அள்ளி வருகிறது.