புதுவை சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ திடீர் உண்ணாவிரதம்

புதுச்சேரி:  புதுச்சேரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ கோலப்பள்ளி அசோக், கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் பாஜ ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10.15 மணியளவில் கருப்பு சட்டை அணிந்து புதுச்சேரி சட்டசபைக்கு வந்த கோலப்பள்ளி அசோக் எம்எல்ஏ திடீரென சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு வந்த சபாநாயகர் செல்வம், எம்எல்ஏவிடம் போராட்டத்தை கைவிட்டு தனது அறைக்கு வந்து பேசுமாறு அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். இதுகுறித்து கோலப்பள்ளி அசோக் எம்எல்ஏ கூறுகையில், முதல்வரை  எதிர்த்து வெற்றி பெற்றேன் என்பதற்காக என்னை பழிவாங்குவதாக நினைத்து தொகுதி மக்களை புறக்கணிக்கிறார்கள் என்றார். மாலை 4 மணிக்கு சபாநாயகர் செல்வம், எம்எல்ஏவை சந்தித்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச வைத்தார். பின்னர் போராட்டத்தை எம்எல்ஏ கைவிட்டார்.

Related Stories: