.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு: முக்கிய குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்ததாக புகார்: சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: சிலை கடத்தல் விவகாரத்தில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தியபோது அதில் முறைகேடுகள் நடந்ததாகவும், முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், என் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தார். இந்த விவகாரம் பற்றி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், சிபிஐ விசாரணைக்கு தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு செய்தார். நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ அதிரடியாக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், ‘திருவள்ளூர் மாவட்ட  முன்னாள் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் விவகாரத்தில் பழவலூரில் 13 கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பு வரும் முன்பாகவே அவர் மீது சிபிஐ திடீரென வழக்கு பதிவு செய்து இருப்பது, தமிழக காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: