குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீச்சு: 51 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீசப்பட்டது. கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. தொடர் மழை காரணமாக ஒருசில விசைப்படகுகளே தற்போது மீன்பிடிக்க  சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க  சென்றனர். மாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் இடிந்தக்கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், தாங்கள்  சாளை மீனுக்கு விரித்த வலையை விசைப்படகு கிழித்து விட்டது என கூறி விரட்டி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இடிந்தகரை மீனவர்கள் 10க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் வந்து விசைப்படகை சூழ்ந்து,  நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதனால் விசைப்படகில் ஓட்டைகள் விழுந்தன. இதையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசில் இருதரப்பு மீனவர்களும் புகார் செய்தனர். இதையடுத்து இருதரப்பையும் சேர்ந்த 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: