அமைதியாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடக்குவார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: அமைதியாக உள்ள தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடக்குவார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவங்கப்பட்டது. பட்டாளத்தில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும். எனவே பொதுமக்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது;

வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த  கனமழைக்கு பின் சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். 9ம் தேதி கனமழை இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது. பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் எதுவும் ஏற்பட்டால் அதனை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு பிறகு சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் சரி செய்ய சாலைகள் போடப்படும்.

புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இடிந்துவிழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இடிந்த கட்டிடங்கள் பழமையான கட்டிடம். அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாநகராட்சியும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பழமையான கட்டிடத்தில் இருப்பவர்களை கண்டறிந்து மாற்றிடத்தில் தங்க வைக்க வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி மாற்றிடத்தில் தங்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. எப்படியாவது அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம். இப்படிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு  தடைக்கல்லாக நிச்சயம் முதல்வர் இருப்பார். தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்துக்கொள்ள முதல்வர் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதன் எல்லை வரை சென்று நடவடிக்கை எடுப்பார். மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கொள்கை, கோட்பாடு திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஊடகங்கள் தோலுரித்து காட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: