தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி: நவம்பர் 3வது வாரத்தில் தொடக்கம்

வேலூர்: தமிழகத்தில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு 412 மையங்களில் நவம்பர் 3வது வாரம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் அரசு, நிதியுதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி (பிளஸ்1, பிளஸ்2) பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தம் 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பர் 3ம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் பிளஸ்1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகப்பட்சமாக 50 மாணவர்கள்), பிளஸ்1 மாணவர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்பட ேவண்டும்.

மையங்களில் வருகை பதிவேடு, மதிப்பெண் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இதுநேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும். 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள், ஒன்றிய அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருக்கவேண்டும். பயிற்சி மைய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: