குந்தாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மஞ்சூர்:  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் குந்தா பகுதியில் அபாயகரமான 43 இடங்களில் வருவாய்துறையினர் தீவிர கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக கடந்த மாதம் இறுதியில் துவங்கிய நிலையில் தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது.

வழக்கமாக, வடகிழக்கு பருவமழையின் போது மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக மஞ்சூர், ஊட்டி, குன்னூர் சாலை, மஞ்சூர் அப்பர்பவானி சாலை, மஞ்சூர் கிண்ணக்கொரை சாலை, எடக்காடு எமரால்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்படுவதும் வழக்கம்.

 

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்வதுடன், சரிவான பகுதிகளில் வீடுகள் இடிந்து பாதிக்கப்படும்.  இந்நிலையில், தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாகவே குந்தா பகுதியில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை தொடர்வதுடன் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி குந்தா பகுதியில் மழை பாதிப்புகளை தவிர்க்க வருவாய்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, பருவமழையை முன்னிட்டு நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மிக பாதிப்பு ஏற்படும் இடங்கள், பாதிப்பு ஏற்படும் இடங்கள், குறைந்த பாதிப்பு ஏற்படகூடிய பகுதிகள் என 4வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. குந்தா பகுதியில் மட்டும் மொத்தம் 43 இடஙகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு வருவாய்துறை மூலம் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாசில்தார் இந்திரா தெரிவித்தார்.

மேலும் பள்ளிகள், சமுதாயகூடங்கள் என 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சீரமைக்க நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ் அறிவுறுத்தலின் பேரில் உதவி பொறியாளர் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர்கள், கூடுதல் சாலை பணியாளர்களுடன் சுமார் 4ஆயிரம் மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மின்வாரியம் சார்பில் மின் விநியோக பாதிப்பை உடனுக்குடன் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: