சென்னையில் கடந்த ஓராண்டில் கைதான 759 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து கடத்திய 1,427 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 1,427 குற்றவாளிகளை போலீசார் கைது ெசய்துள்ளனர். அவர்களில் 759 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை மாநகர காவல்துறை முடக்கி உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை குறைக்கவும், பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து ரயில், லாரிகள் மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததாக இதுவரை 625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  அதில், நேரடியாக கஞ்சா விற்பனை மற்றும் போதை பொருட்கள் கடத்தியதாக 1,427 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், கஞ்சா விற்பனை மூலம் சொத்துகள் வாங்கி குவித்த நபர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் 759 கஞ்சா வியாபாரிகள் அதிகளவில் சொத்துகள் குவித்து இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி 759 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: