இலவச இணைய சேவை கொண்டு வர முடிவு; மெரினா ரோப் கார் திட்டத்திற்கு மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு: கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற தீவிரம்

சென்னை: சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெரினா ரோப் கார் திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. அதற்காக கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெறும் முயற்சிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து பொழுதை கழித்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

சிற்றுண்டி, குளிர்பான கடைகள், பஜ்ஜி, ஜூஸ், துரித உணவகம், வீட்டு அலங்கார பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி, குதிரை சவாரி, டாட்டூ கடை, புகைப்பட கடை, சிறுவர்களை கவரும் ராட்டிணம், நீச்சல் குளம், விளையாட்டு மையங்களும் உள்ளதால் வியாபாரம் களைகட்டும். அதுமட்டுமின்றி சர்வீஸ் சாலையில் நடை பயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பலர் வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினாவுக்கு பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.

உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையாக உள்ள மெரினாவுக்கு இன்னும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், வெளி நாடுகளுக்கு இணையாக மெரினா கடற்கரையை மாற்றும் முயற்சியை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெரினா கடற்கரை முழுவதும் இலவச இணைய சேவையைக் கொண்டு வர உள்ளதாக மாநகராட்சி அறிவித்தது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மிக விரைவில் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளது. மேலும், மெரினாவில் செயற்கை நீர்வீழ்ச்சி பூங்கா உள்ளிட்ட பல வசதிகளையும் உழைப்பாளர் சிலைக்கு அருகே கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னையை அழகுபடுத்த எந்தெந்த திட்டங்களை கையில் எடுக்கலாம் என்பது குறித்து கவுன்சிலர்களிடம் யோசனை கேட்கப்பட்டது.

அந்த வகையில், பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக, சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மெரினா கடற்கரையை வானத்தில் பறந்தபடி பார்க்கும் வகையில் ரோப் கார் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூறினர். அந்த திட்டத்தின்படி, நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாயின்ட் வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்டமாக ரோப் கார் திட்டத்தை கொண்டு வர யோசனை முன்மொழியப்பட்டது. இந்த யோசனை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக ரோப் கார் திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு பிறகாக அடையாறு ஆற்றங்கரையை ஒட்டியபடி சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டியவாரும், நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் வரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்தவும் சாத்தியக் கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை தொடங்குவது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இந்த திட்டத்தை உடனடியாக செயப்படுத்துவது குறித்தும் கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, மெரினாவில் சுமார் 3.5 கிமீ தூரத்திற்கு ரோப் கார் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று ரோப் கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்’என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பயன் அளிக்கும். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மெரினாவில் ரோப் கார் சேவை கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்பன உள்ளிட்ட சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பொறியாளர்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான பரிந்துரைகளை பல்வேறு துறைகளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளன’’ என்றனர். மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதன் மூலம் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள் என்பதால், இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நிரந்தர நடைபாதை

மெரினா கடற்கரைக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் கடலில் கால் நனைக்க வசதியாக, முதலில் தற்காலிக நடைபாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. இது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் மரத்திலான நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த நடைபாதை வசதி திறந்து விடப்பட உள்ளது. இதில் சக்கர நாற்காலியில் செல்லலாம். இதன் மூலம் கடற்கரையின் அழகை எளிதில் சென்று ரசிக்க முடியும். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பறந்தபடி ரசிக்கலாம்

சென்னை மாநகராட்சிக்கு லாபம் ஈட்டித்தரும் விதமாகவும், நகரின் அழகை பறவை போன்று பறந்தபடி ரசிக்கும் விதமாகவும் அமைந்திருக்கும் ரோப் கார் திட்டம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3.5 கி.மீ., தூரம் ரோப் காரில் செல்லும் போது உயரமான இடத்தில் இருந்து கடல் அழகையும், சென்னை நகரின் அழகையும் ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

பிற பகுதிகளிலும்...

இந்த திட்டம் குறித்து மேயர் பிரியா  கூறுகையில், ‘‘முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம்  கொண்டு வரப்படும். இது மற்றொரு போக்குவரத்து முறையாகவும் இருக்கும். வரும்  காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பான  விரிவான திட்ட அறிக்கையைச் சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. தமிழக  அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பு அதற்கான பணிகள் தொடங்கப்படும்’’ என்று  கூறினார்.

Related Stories: