டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை 50,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் 50,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்  திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிள்ளியூர், கண்ணாங்குடி, பிள்ளைபெருமாநல்லூர், மாமாகுடி, மருதமங்களம், நல்லாடை, தில்லையாடி,  திருவிடைகழி, உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யபட்ட 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதே போல் சீர்காழியில் 20ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள்  மழை நீரில் மூழ்கி உள்ளது. கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும்  தண்ணீர் நிரம்பி விட்டதால் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் வடிய தாமதமாகி வருவதால் கொள்ளிடம் ஒன்றியத்தில் 20ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மழை விட்டால்தான் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும்,  தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் வடியாமல் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி விடும் என்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். சீர்காழி அருகே நாட்டுக்கன்னி மணி ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஆற்றில் செல்லும் வெள்ளநீர் அருகே இருந்த 500 ஏக்கர் விளை நிலத்தில் தண்ணீர் புகுந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொற்கையில் வீடு இடிந்து விழுந்ததில்2 பேர் காயமடைந்தனர்.  

* மின்னல் தாக்கி கோபுர கலசம் சேதம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோயில் உள்ளது.  வெள்ளிக்கிழமை தோறும் மதிய வேளையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, அன்னதானம் நடைபெறும். நேற்றும் வழக்கம் போல் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்த சமயத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலிலும், அருகில் உள்ள கலையரங்கிலும் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது கோயில் கோபுர கலசத்தில் மின்னல் தாக்கியது. இதில் ஒரு கலசம் உடைந்து விழுந்தது. கோபுரத்தில் இருந்த சிற்பங்களும் உடைந்தன. மேலும் புறாக்களும் இறந்து விழுந்தன. இதை பார்த்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வேறு எந்த சேதமும் இல்லாமல் தப்பியதாக பக்தர்கள் கூறினர்.

Related Stories: