கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டு பயணம் பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை: ஜனாதிபதி, பிரதமருக்கு ஆளுநர் கடிதம்

திருவனந்தபுரம்: ‘கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டுக்கு சென்றபோது தன்னிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை,’ என்று ஜனாதிபதி, பிரதமருக்கு கேரள ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பினராயும், ஆளுநரும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது உட்பட, கேரள அரசு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களில் இதுவரை ஆளுநர் கையெழுத்திடவில்லை.

இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த பினராய், ‘ஆளுநர் சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்,’ என குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஜனாதிபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆளுநர் ஆரிப் திடீரென கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கடந்த மாதம் முதல்வர் பினராய், கனடா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அது பற்றி என்னிடம் முறைப்படி தெரிவிக்கவில்லை. அவர் வெளிநாடு சென்றபோது, யாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்பதும் கூறப்படவில்லை. இது தொடர்பாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். கேரள அரசியலில் இது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: