21 நாள் குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்: ஜார்கண்டில் மருத்துவ அதிசயம்

ராஞ்சி: ஜார்கண்டில் பிறந்து 21 நாளே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்த நிலையில், அவை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10ம் தேதி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அதை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் நீர்க்கட்டி போன்ற திசுக்கள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்படி பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, 21 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தை, ராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. கடந்த 1ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், நீர்கட்டி போன்ற பகுதிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக 8 கருக்கள் இருந்தது. ஒவ்வொரு கருவும் 3 செமீ முதல் 5 செமீ வரை இருந்துள்ளது. அறுவை சிகிச்சையில் இவை அனைத்தும் அகற்றப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அதன் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து ராணி மருத்துவமனையின் தலைவர் ராஜேஷ் சிங் கூறுகையில், ‘மருத்துவத்தில் இதனை, ‘கருவிற்குள் கரு’ என்பார்கள். இது மிகவும் அரிதான ஒன்று. இதுவரை 8 கருக்கள் இருந்த சம்பவம் வேறு எங்கும் நிகழ்ந்தது இல்லை,’ என தெரிவித்தார்.

Related Stories: