காஸ் கட்டர் மூலம் ‘யூ டியூப்’ பார்த்து ஏடிஎம் மிஷினை உடைத்த கும்பல்-வடமாநில வாலிபர்கள் 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை : ஓசூர் அருகே, மாநில எல்லையான ஆனேக்கல் அருகே, தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை, யூடியூப் வீடியோ பார்த்து காஸ் கட்டர் மூலம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அசாம் மாநில வாலிபர்கள் 5 பேரை, கர்நாடக மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் தாலுகா, பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில், தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த பகுதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. இங்குள்ள ஏடிஎம் மிஷினை, கடந்த மாதம் 22ம் தேதி மர்ம நபர்கள் காஸ் கட்டர் மூலம் உடைத்தனர். ஆனால், முழுவதுமாக உடைக்க முடியாததால், பாதியிலேயே விட்டுச்சென்றனர்.

இதுகுறித்து கர்நாடக மாநிலம் ஜிகினி போலீசார் வழக்குபதிவு செய்து, ஏடிஎம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பாதுகாப்புக்காக பொருத்தியிருந்த 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், 5 வாலிபர்கள் ஆட்டோவில் வந்து ஏடிஎம் மையத்தில் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

 இதையடுத்து, அவர்கள் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, தீவிர விசாரணை நடத்திய ஜிகினி போலீசார், அதே பகுதியில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பாபுல் நோகினயா(23), முகமது ஆசிப்(26), பிஸ்வால்(29), தில்வார் உஷேன்லஷ்கர்(21), ஆமின்(21) ஆகிய 5 வாலிபர்களை நேற்று கைது செய்தனர்.

 விசாரணையில், ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல்லில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர்கள், ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏடிஎம் மிஷினை எவ்வாறு உடைப்பது என யூடியூப்பில் வீடியோ பார்த்துள்ளனர். அதன்படி காஸ் கட்டர் வாங்கி வந்து, ஏடிஎம் மிஷினை உடைத்துள்ளனர். முழுவதுமாக உடைக்க முடியாததால் பாதியிலேயே விட்டுச்சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: