தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037வது சதய விழா கோலாகலம்: ராஜ வீதிகளில் திருமுறை திருவீதி உலா

தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜசோழனின் 1,037வது சதய விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன், 1010ம் ஆண்டு பெரிய கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதயவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒருநாள் மட்டும் பெரிய கோயில் வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு 1037வது சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் பெரிய கோயில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் விழா தொடங்கியது. 2ம்நாளான நேற்று காலை தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினா பின்னர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. ெதாடர்ந்து இரவு ராஜராஜ சோழன், லோகமாதேவி  ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்று விழா நிறைவு  பெற்றது. சதய விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர்  விடுமுறை விடப்பட்டு இருந்தது.

Related Stories: