பாலூர் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10 கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் தவிப்பு

செங்கல்பட்டு: பாலூர் அருகே மழை  வெள்ளம் காரணமாக தரைப்பாலம்  மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பாலூரையொட்டி குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தரைப்பாலம் உள்ளது.

மேற்கண்ட கிராம மக்கள், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தரைப்பாலம் மூழ்கி மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும்  மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:

ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது இப்பகுதியில் உள்ள சாலைகள் மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதை தாண்டி மழைநீர் செல்கிறது. தரைப்பாலம் மூழ்கி மழைவெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 முதல் 10 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு  செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலத்தின்போது கடமைக்கு தற்காலிக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுத்துவிட்டு செல்கிறார்கள். நிரந்தர நடவடிக்கை எடுக்காததால் ஆண்டுதோறும் இதே நிலை நீடிக்கிறது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories: