கோவை கார் வெடிப்பு சம்பவம்: ஈஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து பேசிய ஜமாத் அமைப்புகள்.. மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக பேட்டி..!!

கோவை: கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கோவை மாவட்டம் உக்கடம், கோட்டைமேட்டில் இருக்கும் சிவன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமிஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில் நல்லிணக்க முயற்சியாக கோவையில் உள்ள பெரிய பள்ளி வாசல், சிறிய பள்ளிவாசல், கேரளா முஸ்லீம் ஜமாத் ஆகிய 3 இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, கோவை ஜமாத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா, கார் வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இஸ்லாமிய அமைப்பினரை வரவேற்று கவுரவித்த கோட்டைமேடு சிவன் கோயில் நிர்வாகிகளுக்கு ஜமாத் அமைப்பினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அனைவருடன் ஒன்றிணைந்து கோவையை மத அமைதிக்கு உதாரணமாக மாற்றுவோம் என்று ஜமாத் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

சுமார் 7 தலைமுறைகளாக கோவை கோட்டைமேட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள், மத நல்லிணக்கத்துடன் வாழ்வதையே விரும்புவதாக ஜமாத் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். அரசியல் லாபத்திற்காக யாரும் மதத்தினை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜமாத் அமைப்பினர், ஆன்மீகவாதிகளான தங்களை அமைதியாக வாழ விடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: