விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை; ஆற்றில் வெள்ளப்பெருக்கு 5 தரைப்பாலம் மூழ்கும் அபாயம்: 2ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவுமுதல் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக நேற்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மோகன் உத்தர விட்டிருந்தார். காலையில் சாரல் மழை பெய்த நிலையில் 10 மணிக்குமேல் மிதமான மழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால், விழுப்புரம் நகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர்தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் தொடர்ந்து பெய்துவரும் மழையில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், 5க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது. மேலும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாது 9 மணி வரை பலத்த மழையாக பெய்தது. பின்னர் சாரல் மழையாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக கெடிலம் ஆறு மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணியிலிருந்து இரவு 11மணி வரை மிதமான மழை பெய்தது.

தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள அகழியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து வடிகால் மூலம் வடவாற்றிற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு உடைப்புகள் ஏற்பட்டதால் தண்ணீர் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

கும்பகோணம் பகுதியில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. திருச்சியில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கரூரில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் பல இடங்களில் மழை பெய்தது.

பூம்புகார், வாணகிரி, புதுக்குப்பம், மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Stories: