ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 414 டன் மங்களம் மஞ்சள், மசாலா விற்பனை: மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அசத்தல்

ஈரோடு: ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5.21 கோடி மதிப்பிலான 414 டன் மஞ்சள் மற்றும் மசாலா பொருட்கள் விற்பனையாகி உள்ளது. ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் ‘மங்களம்’ என்ற பெயரில் மஞ்சள் பொடி, மசாலா பொடிகள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. மஞ்சள் உட்பட பல்வேறு விளை பொருட்கள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும்போது, அந்த விளை பொருட்களை வாங்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த, 2015ம் ஆண்டு முதல் ஈரோடு கூட்டுறவு சங்கம் மூலம், ‘மங்களம்’ என்ற பெயரில் மஞ்சள் தூளானது ஒரு கிலோ, 500 கிராம், 100 கிராம், 50 கிராம், 20 கிராம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர். மங்களம் பிராண்டிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.

இதனால்2016ம் ஆண்டு முதல் மங்களம் என்ற பெயரில், மஞ்சள் தூள் மட்டுமின்றி சாம்பார் தூள், மல்லி தூள், ரசப்பொடி, மசாலா பொடிகளும், பின்னர் படிப்படியாக மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, ராகி மாவு, போண்டா பஜ்ஜி மாவு, குழம்பு மசாலா, சப்ஜி, கரம் மசாலா, நாட்டு சர்க்கரை என 15 வகை பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். மங்களம் தயாரிப்பு பொருட்கள் கூட்டுறவு சங்கத்திலும், ரேஷன் கடைகள், ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம், பண்ணாரி அம்மன், கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல்வேறு முக்கிய கோயில்களுக்கு மஞ்சள், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை தயாரித்து அனுப்பி வைத்து வருவதாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பெரியசாமி கூறியதாவது:

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் நடப்பாண்டில் 2021-22ம் ஆண்டில் 9,591 டன் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1,300 டன் அரவை செய்யும் திறன் கொண்டு இயந்திரங்கள் உள்ளது. ஆண்டுக்கு மஞ்சள் தூள் நீங்கலாக மசாலா தூள் மட்டும், 240 டன் அரவை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் வாங்கி, அதனை அரவை செய்து மங்களம் என்ற பெயரில் மஞ்சள் தூளாகவும், மசாலா தூளாகவும் மாற்றி விற்பனை செய்து வருகின்றோம். மஞ்சள், மசாலா தூள்கள் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை மட்டும் 2021-22ம் ஆண்டில் ரூ.5.21 கோடி மதிப்பிலான 414 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சொசைட்டி மூலம், இதுபோன்ற பொருட்கள் இங்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு கூறினார்.

Related Stories: