இஸ்ரேல் தேர்தலில் முன்னிலை நெதன்யாகு மீண்டும் பிரதமராக வாய்ப்பு

ஜெருசலேம்: இஸ்ரேலில் 84 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அவர் மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக 4 ஆண்டுகளுக்குள் 5வது முறையாக கடந்த செவ்வாய்ககிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.   இதைத் தொடர்ந்து, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  நேற்று பிற்பகல் வரை 84 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தது.

நேற்று பிற்பகல் வரை,  4,081,243 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தது. இதில் 24,201 வாக்குகள் செல்லாதவை. தற்போதைய நிலவரப்படி முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 65 இடங்கள் வரை வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது. மொத்த வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டால், இந்த இடங்ளகின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி நெதன்யாகுவின்  கூட்டணி 120 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் 65 இடங்களை கைப்பற்றும்  என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு ஏற்றாற்போல் வாக்கு  எண்ணிக்கையிலும் நேதன்யாகுவின் கூட்டணி தொடர்ந்து  முன்னிலை பெற்று வருகிறது. இதனால், இஸ்ரேலில் 12 ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள நெதன்யாகு, மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு, இவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

Related Stories: