ஒரே நாளில் அடுத்தடுத்து 23 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய வடகொரியா: தென்கொரியாவின் பதிலடியால் பதற்றம்

சியோல்: வடகொரியா நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவியதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை தாக்கிச் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அமெரிக்கா, தென்கொரியாவுக்கு  அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. தென்கொரியாவின் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இதில் குறுகிய துாரம் செல்லும் ஒரு ஏவுகணை ஒன்று,  தென்கொரியாவின் கடல் எல்லையில் விழுந்தது.

இதுகுறித்து தென் கொரிய தலைமை ராணுவ அதிகாரி  பேசுகையில், ‘வடகொரியா குறுகிய துாரம் செல்லும் ஏவுகணை உள்பட பல்வேறு வகையான ஏவுகணைகளை ஏவியது. வடகொரியாவின் செயல் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாதது,’ என தெரிவித்தார். வடகொரியாவின்  இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியாவும் அடுத்தடுத்து மூன்று  ஏவுகணை ஏவியது.  இவை வடகொரியாவின் கிழக்கு எல்லையில் விழுந்ததாக தென் கொரியா தெரிவித்தது.  

தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரிய கடற்பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த நாடு வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவும் தென்கொரியாவும் வடகொரியாவுக்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்த முயற்சித்தால், வடகொரியா இதற்கான எதிர்வினையை தாமதிக்காமல் செய்யும்,’ என்று எச்சரித்துள்ளது.

Related Stories: