காவல் நிலையத்தில் தேங்கி நின்ற மழைநீர்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

ஆவடி: ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆவடி காவல் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இன்று காலை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டார். ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆவடி காவல் நிலையம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணியளவில் அமைச்சர் சா.மு.நாசர் காவல் நிலையம் உள்பட வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர், காவல் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீரை உடனடியாக அகற்ற வேண்டும். வெள்ள தடுப்பு பணிகளில் துரிதகதியில் செயல்பட வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு மின் மோட்டார்கள் மூலம் காவல் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே காலை 7.45 மணியளவில் அமைச்சர் சா.மு.நாசரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள், நிவாரண பணிகள், வடிகால் பணிகளை கண்காணிக்கும்படி அமைச்சர் சா.மு.நாசரிடம் வலியுறுத்தினார். இந்த ஆய்வில் ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ்,  மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், மாநகர பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: