சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள ஏர் சுவிதா முறையை ரத்து செய்ய வேண்டும்; ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஏர் சுவிதா முறையை ரத்து செய்ய வேண்டும்,’ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இடையூறாக இருக்கும் ஏர் சுவிதா முறையை ரத்து செய்யக் கோரி ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு: கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை கண்காணிக்கவும், தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தவும் `ஏர் சுவிதா’என்னும் இணைய பக்கத்தை உருவாக்கி அதில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புதல், தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றுதல் உள்ளிட்டவற்றை அரசு வகுத்திருந்தது.

ஆனால், தற்போது தடுப்பூசிகள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியும் உலகளாவிய சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க, உள்ளூர் தொழில்களை மேம்படுத்த பல நாடுகள் பயணத்திற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளன. `ஏர் சுவிதா’முறையானது சர்வதேச பயணிகளுக்கு சிக்கலான செயல்முறையாக, இடையூறாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிப்பதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இது சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அதனை தளர்த்தும்படி, இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு சமீப காலமாக ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. `ஏர் சுவிதா’இணையதளம் எளிய முறையில் இல்லை, அதன் செயல்முறை குறித்த விழிப்புணர்வு பயணிகளுக்கு இல்லை, விமான நிலையத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள் பற்றாக்குறை போன்ற 3 முக்கிய பிரச்னைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் உள்ள சீரற்ற இணைய சேவையால் கடவுச்சீட்டு, தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள கோப்பு அளவுகள் மற்றும் வடிவங்களுக்கேற்ப மாற்றி பதிவேற்றுவதில் சிரமம் இருப்பதாகவும் பயணிகள் கூறுகின்றனர். இந்த சிக்கலான செயல்முறைகளால் சுற்றுலா பயணிகள் இந்தியா வரும் திட்டத்தை கைவிட்டு வேறு இடங்களை தேர்வு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்கள் புத்துயிர் பெறவும், நோய் தொற்றுக்கு முந்தைய வருவாய் இலக்கை அடைய போராடி வரும் நிலையில், ஏர் சுவிதாவின் தற்போதைய நடைமுறை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கருதப்படுகிறது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு ஏர் சுவிதா முறையை உடனடியாக ரத்து செய்யவோ அல்லது ஏற்கும் வகையில் எளிமையாக மாற்றும்படியோ கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: