போலி ஆவணங்களை ரத்து செய்து உரிமையாளர்களிடம் சொத்துகளை வழங்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு

சென்னை: சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் மற்றும் சென்னை மண்டலத்தின் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளும் அலுவலர்களின் பணி திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி, இந்த கூட்டத்தின் வாயிலாக போலி ஆவணங்களை ரத்து செய்து மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் சொத்துக்களை வழங்க வேண்டும்.

மேலும், கடந்த வருடம் ஜன.21 முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் பதிவு சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து சென்னை, நெல்லை மற்றும் கோவை மண்டலங்களுக்கு ஒரு சிறப்பு தணிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளில் எந்தவித தவறும் நேராத வண்ணம் கவனமுடன் தணிக்கை செய்ய வேண்டும். அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வருவாயினை அடையவும், அரசின் வருவாயை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: