சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு; மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி, கடந்த 2016ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டை டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராம்குமார், 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் செய்திகள் வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில்  மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது உண்மையிலேயே ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார்களா அல்லது எய்ம்ஸ் டாக்டர் சுதிர்குப்தா அளித்த அறிக்கைப்படி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் செல்வக்குமார், பிரேத பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

எனவே, ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை மிக அவசியமாகிறது. உண்மையிலேயே ராம்குமார் மின்சார வயரை கடித்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ராம்குமாரின் தந்தை பரமசிவன் குற்றம்சாட்டுவது போன்று கொலை செய்யப்பட்டாரா? என்விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. 10 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்.

Related Stories: