ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்; ஜெ. நினைவிடத்தில் அதிமுக புதிய நிர்வாகிகள் உறுதியேற்பு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று  ஜெயலலிதா நினைவிடத்தில் தென்சென்னை மாவட்ட அதிமுகவின் புதிய நிர்வாகிகள்  உறுதியேற்றனர். தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுகவின் புதிய  நிர்வாகிகளை சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  அண்மையில் அறிவித்தார். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும்  தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.வி.சதீஷ்  தலைமையில் சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியேற்று  பொறுப்பேற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளரும்  முன்னாள் எம்எல்ஏவுமான ராஜலட்சுமி, இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் அமலன்  சாம்ராஜ் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்

புதிய நிர்வாகிகள் தாங்கள்  மேற்கொண்ட உறுதிமொழியில், ‘‘எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் தனக்கு பின்னாலும்  அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையோடு சட்டமன்றத்தில்  தீர்க்கத்தரிசனத்துடன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால்  பதவி வெறி பிடித்த சுயநல சக்திகளால் பொன்விழா கண்ட அதிமுக பிளவுபட்டு  கிடக்கிறது. லட்சோப லட்சம் தொண்டர்களின் நலன் காக்க அதிமுகவின் ஒரே  நம்பிக்கையாக விளங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சியை அமைப்போம். அதற்காக அதிமுகவின்  புதிய நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது பாகுபாடின்றி உழைப்போம் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உறுதியேற்பு நிகழ்ச்சியில் பகுதி  செயலாளர்கள் குங்குமம் பிரபாகரன் (சேப்பாக்கம் தெற்கு), கேசவன் (ஆயிரம்  விளக்கு தெற்கு), அஜித் (திருவல்லிக்கேணி கிழக்கு), கார்த்தி (திருவல்லிக்கேணி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.        

Related Stories: