மீண்டும் வெடித்தது சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் ரவீந்திரநாத் எம்.பி மீது நடவடிக்கை கோரி தேனியில் வனத்துறை அலுவலகம் முற்றுகை

தேனி: சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை கோரி, கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தேனி மாவட்ட வன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத், காளீஸ்வரன் மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் உள்ள மின்வேலியில் கடந்த செப். 28ம் தேதி ஆண் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. வனத்துறையினர் எம்பி ரவீந்திரநாத், தோட்ட மேலாளர்களான தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

எம்பி ரவீந்திரநாத் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த மாதம் வனத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்க மாநிலத் தலைவர் வக்கீல் சரவணன் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் தேனியில் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு, எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அங்கு வந்த தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் நடத்திய வர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே  ரவீந்திரநாத்திடம் இன்று விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக  தேனி நீதிமன்றத்தில் அரசு வக்கீல் நேற்று தகவல் தெரிவித்தார்.

Related Stories: