உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை போல நாளை நகர சபை கூட்டங்கள்: பம்மலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களை போல நகர சபை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நாளை காலை நடைபெறுகிறது. இந்த கூட்டங்களை சென்னை பம்மலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களின் அடிப்படை தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அவை முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறலாம். குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

 

ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதில் பங்கேற்கலாம். கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். இந்நிலையில் கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

 

இந்த கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிளில் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது.

 

இந்த கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் 6ம்  வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். பின்னர்  அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டு  அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் நாளை காலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

12,525 கிராமங்களிலும் நடக்கிறது: தமிழகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்திலும் கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்மைத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கூட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: