ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பக்கவாதம், சொரியாசிஸ் விழிப்புணர்வு தினம்: மருத்துவ கல்வி இயக்குநர், கலெக்டர் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று உலக பக்கவாதம், சொரியாசிஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று உலக பக்கவாதம், சொரியாசிஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி பங்கேற்று, பக்கவாத விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு பங்கேற்று பேசுகையில், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பக்கவாதத்துக்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ₹35 ஆயிரம் மதிப்புள்ள இம்மருந்துகள், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாதமொன்றுக்கு 200 பேர் பக்கவாத சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீரான உணவு பழக்கவழக்கங்கள், புகைபிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு சரியான முறையில் சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக பக்கவாதத்தை தடுக்க முடியும் என நாராயணபாபு தெரிவித்தார். இதில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, துணை முதல்வர் ஜமீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: