டிடிசிபி அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் பதிவான ஆவணங்கள்; ஆய்வு பதிவுத்துறை ஐஜி அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் டிடிசிபி (நகர் ஊரமைப்பு இயக்ககம்) அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். ஏராளமான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த பணியை விரைவாக  முடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழக பதிவுத்துறையில் ஐஜியாக சிவன் அருள் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு நிலங்களை பதிவு செய்தது குறித்து தகவல் வெளியானவுடன் நடவடிக்கை எடுத்து, அந்த பதிவுகளை ரத்து செய்துள்ளார். மாநிலம் முழுவதும் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். பலரை சஸ்பெண்ட் செய்துள்ளார். பலரை அதிரடியாக மாற்றியுள்ளார். பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் நடவடிக்கையால் பதிவுத்துறை பல்வேறு தவறுகளில் இருந்து விடுபட்டு வருகிறது.

தவறு செய்ய அதிகாரிகள் பயப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறுகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மாநிலம் முழுவதும் டிடிசிபியால் அனுமதி பெறாத நிலங்களை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி மாநிலம் முழுவதும் பதிவுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்ய பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். அதில் சென்னை மற்றும் மேற்கு, மத்திய, தென் மண்டலங்கள் என பிரிவுகளாக பதிவுத்துறை பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உதவி பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர் என 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவினர் ஒவ்வொரு பதிவுத்துறை அலுவலகத்துக்கும் சென்று கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த மாதம் வரை பதிவான பதிவுகள் அணைத்தையும் ஆராய்ந்து, டிடிசிபி அல்லது சிஎம்டிஏவால் அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அனுமதியில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை பதிவுத்துறை தலைவரிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் ஏராளமான பதிவுகள் அனுமதியில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்தால், அதில் உண்மையில் தெரியாமல் பதிவு செய்யப்பட்ட நிலங்களும், சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வேண்டும் என்றே திட்டமிட்டு ஏமாற்றுவதற்காக பதிவு செய்யப்பட்ட நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பதிவு செய்யப்பட்ட நிலங்களின் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் இந்த பதிவுகள் ரத்து செய்யப்படுமா அல்லது பதிவு செய்த அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அனுமதியில்லாமல் பதிவு செய்யப்பட்ட பதிவுகள் குறித்து அதிகாரிகள் 10 நாட்களாக ஆய்வு செய்து வருவது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: